August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

விருதுநகர், ஜூலை 12

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-23ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது சிவகாசி வட்டாரத்திற்குட்பட்ட நாரணாபுரம், அனுப்பங்குளம், கொத்தனேரி, குமிழங்குளம், சித்தம நாயக்கன்பட்டி, வாடியூர், ஜமீன் சல்வார்பட்டி, தேவர்குளம், ஆ.துலுக்கப்பட்டி, சொக்கம்பட்டி, ரெங்கபாளையம், கிருஷ்ணாபுரம், நிறைமதி, கவுண்டம்பட்டி, கிருஷ்ணப்பேரி, பூவநாதபுரம் மற்றும் கட்டசின்னம்பட்டி ஆகிய 17 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் குறைந்த பட்சம் 8 விவசாயிகளைக் கொண்ட 15 ஏக்கர் உள்ள தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கி, அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, தரிசாக உள்ள நிலங்களில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் முட்புதர்களை அகற்றி, சிறுதானிய சாகுபடியினை ஊக்குவித்து, ஒட்டு மொத்த சாகுபடி பரப்பினை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் விசைத் தெளிப்பான், தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதுடன் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் 80 சதவிகித அளவு மேற்கண்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதால் பயன் பெற விரும்பும் விவசாய பெருமக்கள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ, வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகுமாறு சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் க.பா.இரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love