விருதுநகர், மார்ச் 14
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விரிவாக்கச் சீரமைப்புத் திட்டம் (அட்மா திட்டம்) 2021-22-ன் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் – அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான வெங்கடாசலபுரம் கிராமத்தில் 14.03.2022 அன்று விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் சாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு.சந்திரசேகரன் வரவேற்புரையாற்றி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இனங்கள் பற்றியும் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். சாத்தூர் ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இப்பயிற்சியில் விருதுநகர் வட்டாரத்தினை சேர்ந்த இயற்கை விவசாயி கந்தசாமி, கலந்து கொண்டு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி முனைவர் தூண்டில்காளை, கலந்து கொண்டு மண்வளம் பற்றியும் மண்மாதிரி எடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் ராஜதிலகர், கலந்து கொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் சார்ந்த தொழில் துவங்க விவசாய குழுக்கள், உற்பத்தியாளர் நிறுவனம், சுய உதவி குழுக்கள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் கடன் வசதிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சாத்தூர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவி, கலந்து கொண்டு வேளாண் விளை பொருட்களை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் சேமித்து பயனடைய கேட்டுக்கொண்டார். தோட்டக்கலை உதவி அலுவலர் பரமசிவம், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சியின் இறுதியில், விரிவாக்க சீரமைப்புத்திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சு.கணேஷ்குமார், நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நாராயணன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பெ.அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Spread the love