புதுக்கோட்டை, மே 11
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பல்துறை சிறப்பு முகாம் லெம்பலக்குடி, மேலுர், அரசம்பட்டி, துளையானூர் மற்றும் ஆதனூர் ஆகிய கிராம ஊராட்சியில் நடைபெற்றது.
லெம்பலக்குடி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு ந.உமா, வேளாண்மை உதவி இயக்குநர், தலைமையேற்று திட்ட விளக்க உரையாற்றுகையில் இத்திட்டத்தின் மூலம் தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் கைத்தெளிப்பான், வேளாண் கருவிகள் மற்றும் வரப்பு பயிராக உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் அனைத்து சகோதரத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். மேலும் விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல்துறை ரமேஷ், உதவி செயல் பொறியாளர், சிவபிரகாசம், நித்யாதேவி, உதவி கால்நடை மருத்துவர்கள், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் அருண்குமார், கோபு, வேளாண் விற்பனைத்துறை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் அருண் ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறினார்கள். இம்முகாமில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வழங்கப்பட்டது. இச்சிறப்பு முகாமில் அக்கிராம விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பங்குபெற்றனர்.