இராமநாதபுரம், ஜூலை 9
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. விதை சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி மற்றும் அங்கக வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரம் கமுதக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இராமநாதபுரம் விதைசான்று உதவி இயக்குநர் (பொ) மதுரைசாமி கலந்து கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்று பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாட்டினை குறைத்து அதற்கு மாற்றாக மண்புழு உரம், பஞ்ச காவியா, இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து கூறினார். அங்கக சான்று பெற சிட்டா, பான் எண், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முடிவு, பயிர் திட்டம் இவற்றுடன் உரிய கட்டணம் செலுத்த தெரிவிக்கப்பட்டது.
விதைசான்று அலுவலர் சீராளன் கலந்து கொண்டு நெல், பயறு மற்றும் கடலையில் தரமான விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் எடுத்து கூறினார். தற்போது உளுந்து விதை தேவை அதிகம் உள்ளதாலும் குறைந்த வயதில் அதிக மகசூல் தரக் கூடிய ரகங்களை பயிரிட கேட்டுக் கொண்டார். தரமான சான்று பெற்ற விதைகளை மட்டும் பயன்படுத்த கூறினார். ஆதார விதை மூலம் சான்று விதை உற்பத்தி வழிமுறைகள், கலவன்கள் அகற்றுதல், விதை சுத்தி பணி முறைகள் குறித்து விரிவாக கூறினார்.