மதுரை, ஜூன் 3
பயறுவகைகளான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை முதலியவைகளில் கல்லுப்பயறு கலந்திருக்கும். வீட்டில் சுண்டல் அவித்து அதை உண்ணும் போது இதை நாம் அறிந்திருக்கலாம். சில சுண்டலை மென்று சாப்பிடும்போது கடுக்கென்று உடைந்து பல் கூசும் அளவிற்கு சில பயறுகள் கடுமையாக இருக்கும். ஏதோ கல்தான் சுண்டலில் கலந்திருக்கிறது என்று எடுத்துப்பார்த்தால் அது சரியாக வேகாத சுண்டல் என்பது தெரியவரும். எப்படி அவ்வளவு பயறுகளில் ஒன்றிரண்டு பயறு மட்டும் வேகாமல் இருக்கிறது என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை அது தான் கல்லுப்பயறு.
அதாவது, கடின விதை என்று விஞ்ஞான ரீதியாக விதைச்சான்று துறையில் கூறப்படுகிறது. பயறு வகை விதைகளில் கடினத்தன்மை இருந்தால் அந்த விதை முளைக்குமா? முளைக்கும். ஆனால் சாதாரண விதையை விட முளைப்பதற்கு சில நாட்கள் அதிகமாகும். ஏனெனில் கடினவிதை தண்ணீரை உறிஞ்ச கூடுதலாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதனால் முளைப்புத் திறனை வெளிப்படுத்த கடின விதைகள் வழக்கத்தை விட கூடுதலாக சில நாட்களை எடுத்துக்கொள்ளும். விவசாயிகள் காரிப் பருவத்தில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய தயாராக இருப்பார்கள். அவர்கள் தாங்கள் விதைக்க உள்ள பயறு வகை விதைகளில் இயல்பான விதை, இயல்பற்ற விதை மற்றும் கடின விதை எவ்வளவு உள்ளது என்று அறிந்த பிறகு விதைத்தால் தேவையான பயிர் எண்ணிக்கையை எளிதில் பெற முடியும்.