June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காஞ்சிகுடிகாடு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் அங்ககச் சான்று இயக்குநர் ஆய்வு

திருவாரூர், ஜூன் 7

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, காஞ்சிகுடிகாடு விதை சுத்திகரிப்பு நிலையம், திருவாரூர், விதை சுத்திகரிப்பு நிலையம், அரசு உற்பத்தியாளர்கள் விதைப்பண்ணை, விதைப்பரிசோதனை நிலையம் மற்றும் அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களிள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து விதைப்பண்ணை நடப்பாண்டில் இதுவரை 644 எக்டேர் பதிவு செய்யப்பட்டு விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதனை ஆய்வு செய்யும் வகையில் மன்னார்குடி வட்டம் எடைகீழையுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து ஏ.டி.டீ 5 சான்று நிலை விதைப்பண்ணையினை ஆய்வு செய்து, விதைச்சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அரசு விதைப்பண்ணை காஞ்சிகுடிகாட்டில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்று பயிராக கேழ்வரகு, பையூர் 1 இரகம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேட்டு பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அது போல் குறுவை நெல் நாற்றங்காலினையும் பார்வையிட்டார். அதனை அடுத்து காஞ்சிகுடிகாடு மற்றும் திருவாரூர் விதை சுத்திகரிப்பு நிலையங்களை பார்வையிட்டு சுத்தி பணியினை ஆய்வு செய்தார். மேலும் அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள வயல்மட்ட விதை குவியல்களை விதைச்சான்று நடைமுறைகளை முறையாக பின்பற்றி சான்று செய்து காலதாமதமின்றி உடனடியாக வேளாண் விதை விற்பனை மையங்களுக்கு மாற்றம் செய்து விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் தரமான சான்று பெற்ற விதைகள் கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திட விதைச்சான்று அலுவலர்களையும், பண்ணை மேலாளரையும், விதை சுத்தி நிலைய வேளாண்மை அலுவலரையும் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மன்னார்குடியில் மற்றும் பேரளம் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையத்தை பார்வையிட்டு விற்பனை தொடர்பான பதிவேடுகள் மற்றும் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள குறுவை பருவத்திற்கான விதைகுவியல்களை முறையாக பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்றும் அதன் தரம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார். மேலும் விற்பனை வரும் விதை குவியல்களை கட்டாயம் முளைப்புதிறன் பாரிசோதனை செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடவும் இதனை விதை ஆய்வாளர்கள் கண்கானித்து மாதிரிகள் எடுத்திடவும் அறிவுரை வழங்கினார்.

பின்னார் விதை பரிசோதணை நிலையத்தினை பார்வையிட்டு அங்கு பகுப்பாய்வில் உள்ள விதை மாதிரிகள், பகுப்பாய்வுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து அங்குள்ள வேளாண்மை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இறுதியாக இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து விதைச்சான்று துறை அலுவலர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை குறைவின்றி அடைந்து, தரமான விதையினை விவசாயிகளுக்கு வழங்கிடும் வகையில் ஒவ்வொரு அலுவலரும் தங்கள் பணியினை சிறப்பாக செய்திட அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் விதைச்சான்று உதவி இயக்குநர், ஜெயபிரகாஷ், விதைச்சான்று அலுவலர்கள், க.பிரபு, முருகேசன், சதிஸ், ரா.பிரபு, காயத்திரி, திருப்பதி, ஜெகதீஸ், விதை ஆய்வாளர்கள், இளவரசி, முருகராஜ், திவாகர் மற்றும் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் புவனேஸ்வரி, சிவசக்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Spread the love