August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காய்கறி விலை கடும் வீழ்ச்சி

திருச்சி, மே 8

கரோனா காரணமாக சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் காய்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தென்னூர் உழவர் சந்தையில் காய்கறி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது பற்றி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது, பொதுவாக மே, ஜூன் மாதங்களில் பண்டிகைகள், திருமணங்கள் அதிகளவில் இருக்கும். ஓட்டல்களிலும் மொத்தமாக காய்கறிகள் கொள்முதல் செய்வார்கள். இப்போது தேவைகள் சுருங்கி வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் காய்கறி விலை சரிந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்றும் வெண்டைக்காய் கிலோ ரூ. 5க்கும், தக்காளி ரூ.8க்கும், பீன்ஸ் ரூ.15க்கும், கேரட் ரூ.10க்கும், சவ்சவ் ரூ.9க்கும், கத்தரிக்காய் ரூ.20க்கும், மிளகாய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது என்றார்.

மேலும் மார்க்கெட்டுக்கு 22 டன் தக்காளி வந்தது. அதில் 11 டன் தான் விற்பனையானது போக 13 டன் தக்காளி குடோனில் இருக்கிறது என தெரிவித்தார்.

காய்கறிகள் அழுகும் பொருள் என்பதாலும், குறுகிய நேர விற்பனை என்பதாலும் வியாபாரிகள் விற்பனை நடந்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலோ அதில் இருந்து குறைத்தோ விற்பனை செய்கிறார்கள்.

திருச்சியை சேர்ந்த தக்காளி விவசாயி ஒருவர் கூறும் போது, வழக்கமாக இந்த காலகட்டத்தில் தக்காளி விலை ரூ.25 ஆக இருக்கும். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒவ்வொரு கிலோ தக்காளியிலும் விவசாயிகளுக்கு ரூ.18 நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றார்.

Spread the love