சிவகங்கை, மே 11
சிவகங்கை மாவட்டத்தில் உரிமம் இன்றி விதைகள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளார்.
மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை செய்யும் போதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விதை விற்பனை உரிமம் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விதை வினியோகம் செய்தவர் மற்றும் விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதை வாங்கியவர் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் கருவூல இணைய தளம் வாயிலாக உரிமக்கட்டணம் ரூ.1000 ஆன்லைன் மூலம் செலுத்தி, கடிதம் வாயிலாக புதிய உரிமம் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விற்பனை நிலைய அமைவு வரைபடம், சொத்துவரி, வாடகை கட்டிடமாக இருந்தால் ரூ.20, முத்திரைத்தாளில் 5 ஆண்டுகள் ஒப்பந்த பத்திரம், ஜி.எஸ்.டி, ஆதார் நகல், விதை விற்பனை நிலையம் பெயரிலான வங்கி கணக்கு எண் மற்றும் மனுதாரரின் புகைப்படம் (3) ஆகிய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் புதுப்பிக்க விரும்புவோர் மேற்படி ஆவணங்களுடன் உரிமம் புதுப்பிக்கும் இ படிவம், கட்டணம் ரூ.500 செலுத்தி இணையதளம் மூலம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் காலக்கெடு முடிவடைந்த ஒரு மாத காலத்திற்குள் புதுப்பிக்க கட்டணம் ரூ.500 கூடுதலாக செலுத்தி உரிமம் புதுப்பித்துக் கொள்ளலாம். காலத்திற்குள் புதுப்பிக்க தவறினால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் விதை விற்பனையாளர்கள், விதை விற்பனை உரிமம், உரிய பதிவு சான்றுகள், பணி விதை மாதிரி முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விதைகளை விற்பனை செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.