புது தில்லி, ஏப்.23
பருவ காலநிலை மாற்ற பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அதிக வேகத்துடனும் மிகப் பெரிய அளவிலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 40 நாடுகளின் தலைவர்கள் காணொலி முறையில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: வளர்ச்சிக்கான சவால்கள் இருந்தபோதிலும், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி, பசுமை பரப்பளவை அதிகரிக்கச் செய்வது, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்காக பல உறுதியான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
மேலும், கோவிட் தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
பருவநிலை மாற்ற பிரச்னைக்குத் தீர்வுகாண முயலும் பொறுப்புமிக்க வளரும் நாடு என்ற அடிப்படையில், இந்தியாவின் நிலைக்கத்தக்க வளர்ச்சிக் கொள்கையை பின்பற்றும் நாடுகளை வரவேற்கிறோம் என்றும், அது, குறைந்த செலவில் மரபுசாரா எரிசக்திக்கான தொழில்நுட்பத்தைப் பெற விரும்பும் மற்ற வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் மனிதகுலம், சர்வதேச அளவிலான பெருந்தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்ற பிரச்னையால் ஏற்படும் அச்சுறுத்தல் இன்னும் மறையவில்லை என்பதை இந்த மாநாடு உணர்த்துகிறது.
நானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து இந்திய-அமெரிக்க பருவநிலை மாற்றத்துக்கான கொள்கை-2030 என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்து மரபுசாரா எரிசக்தி உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பங்களை உருவாக்குதல், முதலீடுகளுக்கான நிதி திரட்டுவது ஆகியவற்றுக்கு உதவி புரிவோம் என்றார் மோடி.