January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிர்ணி பழங்கள் விலை சரிவு

விழுப்புரம், மே 12

கரோனா தொற்று முடக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால், கிர்ணி (முலாம்) பழங்கள் விலை சரிவடைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் கிர்ணி பழங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய முருக்கேரி, ஆலங்குப்பம், நல்லம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்படுகின்றன. இந்த பழங்கள் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கிர்ணி பழங்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படும். கடந்த ஏப்ரல் மாதம் அறுவடை செய்த விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைத்தது. ஆனால், தற்போது முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வெளிமாநில வியாபாரிகள் பழங்களை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால், பழங்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில், தற்போது பொது முடக்கம் காரணமாக ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கேட்கின்றனர்.

இந்த வருமான இழப்பைத் தவிர்க்க சில விவசாயிகள் சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து புதுச்சேரி, விழுப்புரம் நகரங்களில் வந்து நேரடியாக கிர்ணி பழங்களை விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு கிர்ணி பழம் கிலோ ரூ.20-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கடந்த ஆண்டில் கரோனா பொதுமுடக்கத்தால் கொள்முதல் முடங்கி பெரிய பாதிப்பு ஏற்பட்டது. நிகழாண்டிலாவது லாபம் கிடைக்கும் என காத்திருந்தோம். கடந்த ஒரு மாதமாக ஓரளவு விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது முழு பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றனர்.

Spread the love