May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குடுமியான்மலை ஸ்டாமின் நிலையத்தில் ஊரக இளைஞர் களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை, மார்ச் 12

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் படித்த கிராமப்புற இளைஞர்கள் சொந்த ஊரிலேயே, வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ”தரமான விதை உற்பத்தியாளர்” பயிற்சி மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், (ஸ்டாமின்) குடுமியான்மலையில் 11.03.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிலையான விவசாயத்திற்கு விதையே முக்கிய ஆதாரமாகும். விதையின்றி விவசாயம் இல்லை. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இடுபொருட்களின் பயன்பாட்டுத் திறன் தரமான விதையினைப் பொறுத்தே இருக்கும். அவ்விதையானது தரமான சான்று விதையாக இருப்பின் அதிலிருந்து உற்பத்தி செய்யும் விளை பொருள்களும் மரபுத் தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக மகசூலுக்கான உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும். தற்போது விவசாயிகள் நெல் விதைகளில் 75 முதல் 90 சதவீதம் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்துகின்றனர். பயறு வகைப் பயிர்களில் 10-15 மற்றும் நிலக்கடலையில் 5-8 சதவீதம் மட்டுமே சான்று விதைகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே தரமான விதை உற்பத்தி பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 படித்த ஊரக இளைஞர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 30 நாட்கள் நடக்க இருக்கும் இப்பயிற்சியில் தரமான விதை உற்பத்திக்கான தொழில்நுட்ப பயிற்சி, செய்முறை வகுப்புகளுடன் வேளாண் மற்றும் சகோதரத்துறை அலுவலர்களால் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றது. இப்பயிற்சியின் மூலம் திறன் மேம்பாடு அடைந்த இளைஞர்கள் மூலம், தரமான விதை உற்பத்தி அதிகப்படுத்தப்படுவதோடு, விதை மாற்று விகிதத்தையும் அதிகப்படுத்தலாம். திறன் மேம்பாடு அடைந்த இளைஞர்களுக்கு வேளாண் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரம் உயரும்.

ஸ்டாமின் இயக்குநர், சங்கரலிங்கம் தலைமையேற்று பயிற்சியினை துவக்கி வைத்து பேசுகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி செய்யக்கூடிய உன்னதமான தொழிலை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்தாண்டு உணவு தானிய உற்பத்தி இலக்கு 125 இலட்சம் மெ.டன். இந்த இலக்கினை அடைய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு வேளாண்மைக்கென்றே தனி பட்ஜெட்டாக தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒரு திட்டமே ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி. விதை முதல் அறுவடை வரையிலான பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கி விதை உற்பத்தி செய்யப்பட வேண்டி உள்ளது. இதில் விதை உற்பத்தி, விதை நேர்த்தி, விதை பராமரிப்பு, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த நீர் நிர்வாகம், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. எனவே தரமான விதை உற்பத்திக்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இப்பயிற்சியில் 240 மணி நேரங்களில் வழங்கப்பட இருக்கின்றது. எனவே இளைஞர்கள் இப்பயிற்சியின் மூலம் விதை உற்பத்தி பயிற்சியில் பெற்ற திறனின் மூலம் சொந்தமாக விதை உற்பத்தி செய்யலாம், விதை உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது எனவும், அல்லது சொந்தமான விதை உற்பத்தி நிறுவனம் அமைக்கலாம் எனவும், இதன் மூலம் பயிற்சி பெறுவோரின் வாழ்வாதாரம் உயர ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என பயிற்சி குறித்து விவரித்தார்.

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர், சிவக்குமார் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாட்டிலேயே மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை பயிற்சி நிலையம், ஸ்டாமினில் தான் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும், விதை உற்பத்தித் தொழில் ஒரு உன்னதமான தொழில் மற்றும் வேளாண்மைக்கு அடிப்படையானது எனவும் கூறினார். தற்போது 25 சதவீதம் சான்று பெற்ற நெல் விதைகளே அரசு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதன் உற்பத்தி சதவீதம் அதிகரித்து அனைத்து விவசாயிகளும் சான்று விதைகள் பெறும் நிலை வர வேண்டும். எனவே பயிற்சியாளர்கள் தரமான விதை உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்களை கற்று தேர்ந்து தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என வாழ்த்துக் கூறினார்.

வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் இளைஞர்கள் பெறக்கூடிய வேலைவாய்ப்பு குறித்தும் விளக்கினார்.
குமரேசன், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, பேசுகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுப்பு மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும், பயிற்சியாளர்கள் இப்பயிற்சியின் மூலம் விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, அதனை செயல்படுத்தி, தங்களுக்கான சுய வேலை வாய்ப்பினையும் பெற்றிட வாழ்த்து கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் இப்ராம்சா, ஸ்டாமின் ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் செயல்முறைகளையும் பயிற்சியாளர்கள் பயிற்சி காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் எடுத்து கூறினார். திறன் மேம்பாட்டு பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் தேவி, வேளாண்மை உதவி இயக்குநர், ஸ்டாமின் பயிற்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், இராம. சிவகுமார் தெரிவித்தார்.

Spread the love