ஈரோடு, மே 8
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை காரணமாக, அணை முழு கொள்ளளவான 42 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிவனப் பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், மல்லியம்மன்துர்க்கம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவான 42 அடியையும் தற்போது எட்டியுள்ளது.
கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் இருந்தது. கடந்த 4 நாள்களாக மலைக் கிராமங்களில் பெய்த மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி அணை வேகமாக நிரம்பி வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நீர்மட்டம் 39.39 அடியாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,000 கன அடி வரை வந்துள்ளதால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் 9,000 கன அடி உபரிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஓடையில் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் இறங்க வேண்டாம் என்றும், கரையோர மக்கள் மேடான பகுதிக்கும் , பாதுகாப்பான இடத்துக்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்தால் உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் விநாடிக்கு 9,000 கன அடியாக இருந்த உபரிநீர் வெளியேற்றம் படிப்படியாகக் குறைந்து தற்போது ஆயிரம் கன அடியாக உள்ளது.