August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி, ஏப்.20

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதியிலும், மலையோர பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 72.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சிற்றாறு-1, சுருளோடு, மாம்பழத்துறையாறு, கோழிப்போர்விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. அணைக்கு 447 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. அணைக்கு 162 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு : பேச்சிப்பாறை-72.4, பெருஞ்சாணி-70.2, புத்தன் அணை-69.8, சிற்றாறு-1-45.2, சிற்றாறு-2-7, சுருளோடு-41.4, பூதப்பாண்டி-2.4, களியல்-6.2, கன்னிமார்-8.2, குளச்சல்-3.2, பாலமோர்-9.6, மாம்பழத்துறையாறு-3, கோழிப்போர்விளை-25, அடையாமடை-4, முள்ளங்கினா விளை-24.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலே அடித்து வருகிறது. நேற்றிரவு மின்னல் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

Spread the love