சென்னை, மே 13
குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் உரங்கள் உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி காலம் விரைவில் துவங்கவுள்ளது. இந்த பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும். மாநிலம் முழுதும் சேர்த்து 7.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும். கரோனா ஊரடங்கு காலம் என்பதால் சாகுபடி பணிகளில் தொய்வு ஏற்பட கூடாது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இயல்பான பரப்பளவில் சாகுபடியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை வேளாண் துறை துவங்கியுள்ளது. மாநிலம் முழுதும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகள் உயிர் உரங்கள் நுண்ணுாட்ட சத்துக்களை தேவையான அளவில் இருப்பு வைக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் போதுமான அளவில் உரங்களை இருப்பு வைக்க வேண்டும்.
மேலும், இடுபொருட்களை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இருப்பு நிலவரத்தை வாரம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை நேரிலோ அல்லது மொபைல் போன் வாயிலாகவோ தொடர்பு கொண்டு அவர்களின் நிலத்திற்கு தகுந்த குறுவை பருவ விதை நெல் மட்டுமே தேர்வு செய்து விதைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். இப்பருவத்தில் பயிரிட வேண்டிய ஐந்து விதை நெல் ரகங்கள் குறித்த விபரங்களும் வேளாண் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.