மதுரை, ஏப்.27
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10.590/- என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் 2.2.22 முதல் 31.7.22 வரையிலான காலத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு உத்தரவிட்டுள்ளது,
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்தமைக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இப்போதே பதிவுகள் செய்திடலாம். பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள அரவைக் கொப்பரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவாகவும் பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் ஈரப்பதமானது 6 சதவீதத்திற்கு குறைவாகவும். இருக்க வேண்டும். ஆய்வகத் தரப்பரிசோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக்கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்,