கொடிக்காபுளி இது வெப்பமண்டல இருவித்திலை தாவர பயிர். இதற்கு “மணிலா புளி, கோண புளியாங்காய் ” என்ற பெயரும் உண்டு. எல்லா நிலத்திலும், ஏன் தரிசாக உள்ள நிலங்களிலும் வரப்பு ஒர பயிராகவும் தொகுப்பு பயிராகவும் நடவு செய்யலாம். இது காற்று தடுப்பானாகவும், கால்நடைகளுக்கு இதன் இலை தீவனமாக பயன்படுகிறது. சிறுவயதில் இப்பழங்களை சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டாங்க. தற்காலத்து சிறுவர்களுக்கு இந்த வாய்ப்பு இருப்பது சற்று குறைவு தான்.
PKM 1 என்ற ரகம் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மழைக்காலங்களில் (ஜூலை, ஆகஸ்ட்) மாதங்களில் ஏக்கருக்கு 20 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.
நட்ட ஒரு வருடத்திலே பூக்கள் வரத் தொடங்கும். அவற்றை அகற்றிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காய்ப்பு அனுமதிக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, அதிக அளவாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டியதில்லை. மகசூல் ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 18 முதல் 23 கிலோ கொடிக்காய் பழம் கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோ பழம் 100 ரூபாய்க்கு விற்பனையாகும். இந்த பழம் எல்லா சத்துகளும் குறிப்பாக இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள் நிறைந்தது. நீரிழிவு நோயாளிக்கு எற்ற பழமாகும். மரத்தின் டிம்பர் வேப்ப மரத்தின் டிம்பர்க்கு இணையானது. மரமும் பல வித மரபொருட்கள் தயாரிக்க முடியும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கண்டிப்பாக இந்த மரங்களை நட வேண்டும். மண்ணின் வளத்தை பெருக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகவும், மனிதர்களுக்கு உண்ண சத்துமிக்க பழமாகவும் இது திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கொடிக்காபுளி நட்டு குறைவில்லா வருமானம் பெற நாமும் முயற்சிப்போம்.