புது தில்லி, ஜூலை 14
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சகம், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைத் துறையுடன் இணைந்து தேசிய அளவிலான மாநில வேளாண் அமைச்சர்களின் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜுலை 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒன்றிய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், ஒன்றிய வேளாண்மை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மற்றும் கைலாஷ் சௌத்ரி கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில், ஒன்றிய அரசின் இணை அமைச்சர்களும், அரசு செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்களும் கலந்து கொண்டு பல்வேறு பொருண்மைகள் குறித்து உரையாற்றி வருகிறார்கள். இதில் அனைத்து மாநிலங்களின் வேளாண்மைத் துறை அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் மற்றும் பிற உயர் அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டின் சார்பாக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி மற்றும் வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டுள்ளார்கள். இம்மாநாட்டில் வேளாண்மை – உழவர் நலத்துறை தொடர்பாக மின்னணு வேளாண்மை, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், இயற்கை வேளாண்மை, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் தேசிய மின்னணு சந்தை, நவீனயுக உரங்கள், பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம், சர்வதேச சிறுதானிய ஆண்டு, வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுவின் புதிய தொழில் நுட்பம் போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.