புது தில்லி, மே 8
கெய்ர்ன் நிறுவனம் பணத்தை பறிமுதல் செய்துவிடுமோ என்ற அச்சத்தில், வெளிநாட்டு கரன்சி கணக்குகளில் உள்ள நிதிகளை திரும்பப் பெறுமாறு, பொதுத்துறை வங்கிகளை, அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
இங்கிலாந்தை சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதற்கிடையில், 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், ரூ.12, 410 கோடியை, மத்திய அரசு தர வேண்டும் என, கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அத்துடன் இந்தியா, தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளுது. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளில், அந்நாட்டு பணத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் இருக்கும் தொகையை முழுதும் எடுத்துவிடுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.