September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வால் சிமென்ட் வர்த்தகத்தில் விறுவிறுப்பு: இந்தியா சிமென்ட்ஸ்

சென்னை, செப்.9

வரும் நாட்களில் சிமென்ட் நுகர்வு விறுவிறுப்படையும் என இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் காணொலி வாயிலாக அண்மையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதையடுத்து பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில, சிமென்ட் துறையின் வர்த்தகமும் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கான முதலீடுகளை அதிகரித்துள்ளது. அதன் பயனாக, வரும் மாதங்களில் சிமென்ட் நுகர்வு கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் ரூ.551 கோடி மதிப்பிலான கடன்களை நிறுவனம் திருப்பிச் செலுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தைப் பொருத்து நடப்பாண்டிலும் அதே அளவிலான கடன்களை நிறுவனம் திரும்பச் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர். மேலும், இந்நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில், இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு என்.சீனிவாசன் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Spread the love