மருத்துவமனை டாக்டர் குழு மற்றும் சேர்மன் முத்துராமலிங்கம் தகவல்:
மதுரை:
மதுரை வேலம்மாள் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மற்றும் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வேலம்மாள் மருத்துவமனை முக்கியத்துவம் தருகிறது, சிறந்த உடல் மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக தமிழக அரசிடம் இருந்து 3 முறை விருதை பெற்றுள்ளது, கடந்த 4 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது, 200 க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது”.
கடந்த மாதத்தில் ஒன்னரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு அந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக உள்ளது. இந்த குழந்தைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் உயிரிழந்த 4 வயது குழந்தையின் கல்லீரல் தானமாக கிடைத்ததால், உடனடியாக அந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
அதே போல வேலம்மாள் மருத்துவமனை மூலமாக, 44 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கடந்த 4 ஆண்டுகளில் 68 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஒரு கணைய அறுவை சிகிச்சை ஆகியன சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் வேலம்மாள் மருத்துவ மனையில் தான் இது போன்ற அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. அதே போல முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழும், இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் வேலம்மாள் மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது சிறப்பு மருத்துவர்கள் ஆழ்வார் ராமானுஜம், செந்தில், விஜயானந்த் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.