சென்னை, மே 20
கோவிட் தொற்று தடுப்பு பணி குறித்து அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் வரும் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அவசர அவசியம் கருதி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து, ஆலோசனைகள் பெற, அவ்வப்போது கூடி விவாதிக்கும் என்றும், பொதுத்துறை செயலர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் எம்எல்ஏக்கள் குறித்த அறிவிப்பு கடந்த 13ஆம் தேதி வெளியானது.
அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் முனிரத்தினம், பாமகவின் ஜி.கே மணி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மதிமுக சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா, வேல்முருகன், பூவை ஜெகன் மூர்த்தி என ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஊரடங்கு, கோவிட் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அரசின் செயல்பாடுகள் பற்றி இக்குழுவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நியமிக்கப்பட்டது. இது வரும் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால், நாளை மறுநாள் (மே 22) காலை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் 13 எம்எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில், கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு உறுப்பினர்களிடம் பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.