வேளாண் அலுவலர் தகவல்
இராமநாதபுரம், ஏப்.21
இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் வடகிழக்கு பருவமழையினால் சம்பா பயிர் சாகுபடி புரட்டாசி மாதத்தில் விதைப்பு பணிகள் தொடங்கி தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. இதனால் கோடை மழை அதிக அளவு மற்றும் மண்ணுக்குள் புகாமல் மழைநீர் வழிந்தோடி விணாகிறது. மண்ணுள் மழைநீர் புகாததால் மண்ணில் ஈரம் குறைந்து ஆவியாகி விடுகிறது. இதனால் எவ்வித பயனும் இல்லை.
கோடை உழவு செய்வது மழை நீரை 6 அங்குல ஆழத்துக்கு நிலத்தடியில் இருப்பு வைக்க முடியும். இதனால் மழை நீர் எளிதில் ஆவியாகாமல் தடுக்க முடியும். கோடை உழவு சிறந்த மற்றும் செலவு குறைந்த தொழில் நுட்பமாகும். மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கப்படுவதோடு மண்ணின் அமைப்பும் மேம்படுத்தப்படுகிறது. மண்ணின் இறுக்கம் தளர்த்தப்பட்டு மண்ணின் நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கப்படுவதால் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரித்து மண்ணில் உள்ள கழிவுப் பொருள்களை மக்கவைத்து பயிர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது. மண்ணில் உள்ள ரசாயன களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி நச்சுத் தன்மை குறைக்கப்படுகிறது.
மண்ணுக்குள் இருக்கும் பூச்சி முட்டைகள் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன, களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கோடை உழவு செய்யும் போது சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மழைநீர் தேங்கி நின்று மண்ணுக்குள் ஆழமாகச் சென்று பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் தன்மையை கொடுக்கிறது.