June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை உழவு செய்து மண் வளத்தை மேம்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 22

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்து பயன் பெற வேண்டும். கோடை கால உழவு மேற்கொள்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி விதை அல்லது பயிர் நன்கு வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்கலாம். மண்ணில் காற்று பரிமாற்றம் அதிகரித்து பயிர் மற்றும் விதைகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்து கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி மண்ணின் இறுக்கம் குறைக்கப்பட்டு பயிரின் வேர்கள் நன்கு வளர்ச்சி பெற உதவுகிறது.

கூட்டு புழு அழிப்பு :

கோடை உழவு செய்வதால் மண்ணின் அடியிலுள்ள பயிர்களை தாக்கி அழிக்கும் பபூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தாலும் பறவைகளாலும் அழிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் போடப்பட்ட இயற்கை எருவிலுள்ள களை விதைகள் முற்றிலும் அழிக்கப்படுவதுடன் அவைகளும் ஏற்கனவே மண்ணிலுள்ள செயற்கை உரங்களும் மண்ணுடன் நன்கு கலந்து அவற்றின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைத்திட வழி வகுக்கும். கோடை உழவு செய்யும் போது நிலச்சரிவுக்கு குறுக்காக உழுவதன் மூலம் நிலத்தில் மழை நீர் அதிக அளவு உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீரீன் மட்டம் அதிகரிக்கின்றது.. ஆகவே கல்லல் வட்டார விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா கூறினார்.

Spread the love