விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்
விருதுநகர், மே 10
தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சட்டிக்கலப்பை மூலம் கோடை உழவு செய்து நிலத்தை தயார் படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணில் மறைந்திருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப்புழுக்கள் போன்றவற்றை எளிதில் அழித்து விடலாம். அத்துடன் மண் வளத்தை பாதிக்கும் களைச் செடிகள் மற்றும் அதன் விதைகளையும் அழித்து விடலாம். மேலும் மழைநீரானது வளி மண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தை அதிகரிக்க செய்யும். விளை நிலத்தின் மேல் மண் வளம் பாதுகாக்க கோடை உழவு அவசியமாகும். கோடையில் பொதுவாக இரண்டு மழை கிடைக்கும்.
முதல் மழையிலேயே உழவு செய்து விட வேண்டும். அப்போது தான் இரண்டாவது மழை நீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும். கோடை உழவு வழக்கமான மழை போல் இருக்காது. பொதுவாக வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் இருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் அச்சத்துக்கள் கலந்து பூமிக்கு வரும். கோடை உழவு செய்து வைத்த மண்ணில் இந்தச் சத்துக்களைச் சேமிக்க முடியும். கோடை மழையில் நிறைவாக அறுவடை செய்யலாம்.
முதல் நாள் கிடைக்கும் மழையை பயன்படுத்தி உழவு செய்து விட வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்து கிடைக்கும் மழையில் வளிமண்டலத்திலிருந்து மழையுடன் பூமியில் இறங்கும் சத்துக்களை மண்ணில் சேமிக்கலாம். ஒரு வயலில் தொடர்ந்து ஐந்து ஆண்டு கோடை உழவு செய்தால் அந்த நிலத்தில் மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.