June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோடை உழவு முறைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம்

கடலூர், ஏப்.22

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஊரக வளர்ச்சி மையத்தின் வாயிலாக உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட கிராமமான நக்கரவந்தன் குடியில் 20.04.2022 அன்று கோடை உழவு முறைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் முனைவர் பி. பாலமுருகன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து வளம் நீடித்த வேளாண் வளர்ச்சிக்கு இயற்கை விவசாய முறையையும், பாரம்பரிய விவசாய திட்டத்தினையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என உரையாற்றினர். நக்கரவந்தன்குடி உழவர் மன்றத் தலைவர் எஸ். குலசேகரன் முன்னிலை வகிக்க, நக்கரவந்தன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். தியாகராஜன் மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் ச.சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். அவ்வமயம், வேளாண் புல உழவியல் துறைப் பேராசிரியர் முனைவர் பி.ஆனந்தன், கோடை உழவு முறைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். அப்போது உரமிடும் போது ஊட்டச்சத்து, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றினை சமமாக மற்றும் நிலத்திற்கு தேவையான அளவு இட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் மண் வளக்குறைபாடு ஏற்பட்டு மகசூல் குறைந்து விவசாயிகள் குறைவான மகசூல் பெரிதும் பாதிக்கின்றனர். அதனைத் தவிர்க்க சமச்சீர் வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், நீர் மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிக அளவு நீரைப் பாய்ச்சும் போது பயிர் வளராமல் மண் உவர் மண்ணாகும் வாய்ப்பு அதிகமாகி மண் மலடாகி விவசாயம் அழிவதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும்.

எனவே, கோடை உழவு முறைகளை சரியாக பின்பற்றும் போது விவசாயிகள் அதிக பலனை பெற இயலும் என்றார். பின்பு. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தினை அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் கோ.வேதாந்ததேசிகன் வரவேற்புரை ஆற்றி கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில் நக்கரவந்தன்குடி ஊராட்சி ஒன்றிய செயலாளர் பார்த்திபன் நன்றி தெரிவித்தார். இக்கருத்தரங்கில் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love