August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தியை தமிழகத்திலேயே தொடங்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மே 18

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை ஒரே நாளில் 33 ஆயிரத்து மேல் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிட் நிலவரம் தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி 9 மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்தியாவில் கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடனான பிரதமர் மோடி ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனையில் மாநில முதல்-அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் கோவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப்போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்பசாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும்.

குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும்.

இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 தொண்டு நிறுவனங்களுடன்
முதல்வர் ஆலோசனை

கோவிட் பரவல் தடுப்பு குறித்து 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கோவிட் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்கூட்டத்தில் தன்னார்வலர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் சூழலிலும் நாயளான்றுக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இருப்பினும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வலர்கள் சிலர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு அரசுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர். மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது, நோயாளிகளை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது, தேவைபபடுவோருக்கு மருந்துகள் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு மகத்தான பணிகளை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து வருகின்றனர்.

Spread the love