சென்னை, மே 11
பொது முடக்க காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ள ஊரடங்கால், இந்த கால கட்டத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த அவகாசம் அளிக்கும்படி, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, மின் வாரியம் அளித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள், கடந்த, 10ம் தேதி முதல் வரும், 24ம் தேதி வரை இருக்கலாம்.
அத்தகையோர், மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், மின் நுகர்வோருக்கு வழங்கியுள்ள இணையதள வழி வாயிலாக, வலைதள மற்றும் கைபேசி வங்கியியல், ‘பேமண்ட் கேட்வே, பாரத் பில் பே’ போன்றவற்றின் வாயிலாகவும், பணம் செலுத்தலாம். மே மாத கணக்கீட்டு தொகை விபரம், மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மின் நுகர்வோர்கள், இந்த விபரங்களை, ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.