புது தில்லி, ஏப்.27
கோவிட் தடுப்பூசி விலை நிர்ணயம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றின் விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் மூலம், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்தது.
ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் மாநில அரசுகளுக்கு ரூ. 600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்ற விலையையும் அறிவித்தது.
இந்த விலை உயர்வு மற்றும் மாறுபட்ட விலை நிர்ணயத்துக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், மாநிலங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் தில்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்கள் தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.