January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தொற்று பேரிடரால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வரத்து சரிவு

புது தில்லி, மே 14

நாட்டில் கோவிட் தொற்று 2வது அலை காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவு கணிசமான சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு ஏப்ரலில் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.3,437 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான ரூ.9,115 கோடியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

அதேநேரம், லிக்யுட், நிதிச் சந்தை, ஓவர்நைட் ஃபண்ட் திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து கடன் பரஸ்பர நிதி திட்டங்கள் ஏப்ரலில் ரூ.1 லட்சம் கோடியை ஈர்த்துள்ளது.

மேலும், ஏப்ரலில் ஒட்டுமொத்த அளவில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டு வரத்தானது ரூ.92,906 கோடி அளவுக்கு இருந்தது. அதேநேரம், மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறையிலிருந்து ரூ.29,745 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, பங்கு மற்றும் அது சார்ந்த ஓபன் என்டட் திட்டங்களில் ஏப்ரலில் ரூ.3,437.37 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் இடிஎஃப் திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து ரூ.662 கோடியிலிருந்து ரூ.680 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு மார்ச்சில் ரூ.31.43 லட்சம் கோடியாக இருந்த பரஸ்பர நிதித் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏப்ரல் இறுதியில் ரூ.32.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love