மும்பை, ஏப்.30
கோவிட் தொற்று பேரிடருக்காக வேதாந்தா நிறுவனம் ரூ.150 கோடி மத்திய அரசுக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட உலக நாடுகளில் உலோக தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு கோவிட் பரவலின் போது அதை எதிர்த்து போராட வேதாந்தா குழுமம் சார்பில் ரூ.201 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது அலையின் தாக்கத்தையும், விலைமதிப்பற்ற உயிர்களையும் இழந்ததை கண்டு நான் மிகுந்த கவலையும், வேதனையும் அடைகிறேன் என அவர் தெரிவித்தார். மேலும், வேதாந்தா குழுமம் ரூ.150 கோடி செலவில் 2-வது கொரோனா அலையை எதிர்த்து போராட மத்திய, மாநில அரசுகளுடன் கைகோர்த்து செயல்பட உள்ளது.
தில்லி, ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் கோவிட் அவசர சிகிச்சைப்பிரிவை தொடங்கி உள்¼ளாம். தற்போது 700 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது 1,000 படுக்கை வசதிகளாக உயர்த்தப்படும். மேலும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும். எங்களது ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்த ஆலை மூலம் தினமும் 1,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த இக்கட்டாண சூழலில் அரசு மற்றும் மக்களுடன் வேதாந்தா குழுமம் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.