October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் ரயில்வே நீட்டித்தது

புது தில்லி, அக்.8

கோவிட் மூன்றாவது அலைக்கான சாத்தியம் இருப்பதால் ரயில்வே துறை, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கோவிட் வழிகாட்டுதல்களை ஆறு மாதங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கோவிட் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரயில்களில் முன்பதிவு பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

புறநகர் ரயில்களில் மட்டும் நேரக் கட்டுப்பாடுகளுடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்., முதல் தேதியிலிருந்து குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே முன்பதிவில்லாமல் செல்லும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும், எனவே கோவிட் வழிகாட்டுதல்களை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் படி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கோவிட் தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரயில்வே விதிகள் 2012, வளாகத்தின் சுத்தத்தை பாதித்தல் பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என உறுதிச் செய்ய வேண்டிய பொறுப்பை மண்டல அலுவலங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love