புது தில்லி, ஏப்.30
மாநிலங்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி விலையை ரூ.600-லிருந்து ரூ.400-ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: புணேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் அதன் கோவிUல்ட் தடுப்பூசிக்கான விலையைக் குறைத்ததைத் தொடர்ந்து, ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் விலைக் குறைப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தும்விதமாக தடுப்பூசி தாராளமய கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், அவற்றின் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டன. சீரம் நிறுவனம் அதன் கோவிஷீல்ட் தடுப்பூசி (ஒரு டோஸ்) விலையை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ. 400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என நிர்ணயம் செய்தது.
பாரத் பயோடெக் நிறுவனம் அதன் கோவேக்ஸின் தடுப்பூசி (ஒரு டோஸ்) விலையை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ. 600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என நிர்ணயம் செய்தது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் இந்த மாறுபட்ட விலை நிர்ணயம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மத்திய அரசுக்கு அளிக்கப்படும் விலையிலேயே மாநில அரசுகளுக்கும் நிறுவனங்கள் தடுப்பூசியை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தடுப்பூசிகளுக்கான விலையை சற்று குறைக்குமாறு அந்த நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், மாநில அரசுகளுக்கான தடுப்பூசி விநியோக விலையை நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.
மேலும், மாநில அரசுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி விலையை ரூ.400லிருந்து ரூ.300-ஆக குறைத்து சீரம் நிறுவனம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனமும், மாநில அரசுகளுக்கான அதன் கோவாக்ஸின் தடுப்பூசி விலையை ரூ.600லிருந்து ரூ.400-ஆக குறைத்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடுமையான கரோனா பாதிப்புச் சூழல் மிகுந்த கவலையளிக்கிறது. பொது சுகாதார நடைமுறைக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சவால்களை கருத்தில்கொண்டு, மாநிலங்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி தலா ரூ.400 விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.