புது தில்லி, மே 13
கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் மாதாந்திர உற்பத்தி 10 கோடியாக அதிகரிக்கப்படும் என சீரம் நிறுவனமும், கோவேக்ஸின் தடுப்பூசிகளின் மாதாந்திர உற்பத்தி 7.8 கோடியாக உயர்த்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனமும் தெரிவித்துள்ளன.
இது குறித்து விரிவான செய்தியாவது:
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான தங்கள் தடுப்பூசி உற்பத்தி திட்டம் குறித்து சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககமும் அறிக்கை கோரியிருந்தன. இந்நிலையில், இரு நிறுவனங்களும் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தன. அந்த அறிக்கைகளின்படி, ஜூலை மாதம் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 3.32 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 7.82 கோடியாகவும் அதிகரிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் மாதமும் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 7.82 கோடியாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி 10 கோடியாக அதிகரிக்கப்படும் எனவும், செப்டம்பர் மாதமும் இதே அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.