September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோ 6 நிலக்கடலை சாகுபடியில் வெற்றி விவசாயி

தேனி, செப்.14

தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை முதன்மையான பயிர் ஆகும். தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, மதுரை போன்ற பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சமீப காலங்களில் மானாவரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை குறைந்த மகசூலே கொடுக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது புதிய இரகங்களை பயிரிடாமை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை கையாளாமல் இருப்பதே ஆகும்.

தேனி மாவட்டம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட முன்னிலை செயல்விளக்க திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த விவசாயி நேரு என்பவர் கோ 6 நிலக்கடலை இரகத்தின் சிறப்பியல்புகள் பற்றி கூறும்போது தேனி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பழைய நிலக்கடலை இரகங்களையே பயிரிட்டு வருகின்றன. புதிய இரகமான கோ-6 நிலக்கடலை 125-130 நாட்களில் முதிர்வுறும் தன்மை கொண்டது மேலும் மானாவரியில் 23 குவிண்டால் அளவுக்கு அதிக மகசூல் தரக்கூடியது. நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு நவீன தொழில்நுட்பங்களை வேளாண் அறிவியல் மைய தொழிநுட்ப பயிற்சி மூலம் பெற்று அதிக லாபம் பெறலாம் என கூறினார்.
மேலும் விவசாயிகள் அனைவரும் நவீன வேளாண் நுட்பங்களான விதை நேர்த்தி மூலம் நோய் வராமல் தடுத்து எதிர்ப்புசக்தியை கொடுப்பதற்கு டிரைக்கோடெர்மா என்ற உயிர் பூஞ்சானக்கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். அதேபோல் ரைசோபியம் நுண்ணுயிர் 600 கிராம் இதனுடன் ஆறிய வடிக்கஞ்சி சேர்த்து விதையை கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும். இதனால் பயிர் வளரும் போதே செழிப்பாக வளரும். விதைத்த 20 நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். அப்போது செடியானது வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். பயிரில் அதிகபட்ச மகசூல் எடுப்பதற்கு மண் பரிசோதனை அடிப்படையில் 17:34:54 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். உரங்களை இடும்போது தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை மூன்று பகுதிகளாக பிரித்து அடியுரமாக 1 பகுதி 20 நாளில் ஒரு பகுதி 45 நாளில் ஒரு பகுதி என இட வேண்டும். இதனால் உர கிரகிப்பு அதிகமாகி மகசூல் பெருகும். அதேபோல் இரண்டாவது களையை 45 நாளில் எடுக்க வேண்டும். அதேவேளையில் மண் அணைப்பு செய்து ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை இடவேண்டும். இதனால் காய்களின் எடையும் எண்ணிக்கையும் அதிகமாகும். பூப்பூக்கும் தருணத்தில் நிலக்கடலை ரிச் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கருக்கு 2 கிலோ விதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் மகசூலானது 20 சதவீதம் வரை கூடும். சூரியகாந்தி போன்ற பயிரை கவர்ச்சி பயிராக வரப்பு ஓரங்களில் ஊடுபயிராக பயிரிட்டு பூச்சி நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தலாம்.

மேற்கொண்ட தொழில்நுட்பங்களை கையாண்டாள் பிரதமரின் கூற்றுப்படி மும்மடங்கு மகசூல் இருமடங்கு லாபம் என்ற நிலையை அடையலாம் என தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தொகுப்பு : முனைவர் பெ.பச்சைமால், பொ.மகேஸ்வரன், எம் அருண்ராஜ், சி.சபரிநாதன், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி.

Spread the love