June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சமச்சீர் உர பயன்பாடு மற்றும் மண்டலத்திற்கு ஏற்ற வேளாண் காடுகள் விழிப்புணர்வு பயிற்சி

சேலம், ஜூன் 22

சேலம் மாவட்டம், அந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் இப்கோ இணைந்து 21.6.22 அன்று வீரபாண்டி வட்டாரத்திலுள்ள புத்தூர் கிராமத்தில் சமச்சீர் உர பயன்பாடு மற்றும் மண்டலத்திற்கு ஏற்ற வேளாண் காடுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. புத்தூர் கிராமத்தின் முன்னோடி விவசாயி ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.ஜெகதாம்பாள் தலைமையேற்று வேளாண் காடுகள் மண் வளம் மற்றும் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தலைமையுரையாற்றினார். புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பி.சிவானந்தம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கிரிஜா, வேளாண்மை துறையில் உள்ள அரசு திட்டங்கள் பற்றியும் வேளாண்மை அலுவலர் வனத்துறை இரா.காயத்ரி, வேளாண் காடுகள் பற்றியும் சேலம் மாவட்டம் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தைச் சேர்ந்த அருள்மணி, நானோ யூரியா பற்றியும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.

வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் மா.மலர்கொடி, தமது உரையில் மண் பரிசோதனையின் அடிப்படையில் உரம் இடுவதால் ஊட்டச்சத்து மற்றும் பண விரயத்தை தடுக்கலாம் எனவும் ஒருங்கிணைந்த மற்றும் சமச்சீர் உரமிடுதல் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பூச்சிகள் துறை விஞ்ஞானி முனைவர் மா.ரவி, இயற்கை முறையில் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி விளக்கினார். தொழில்நுட்ப வல்லுனர் (வேளாண் காலநிலை) முனைவர் சி.பிரதீபா, காலநிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் அடங்கிய தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது. உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி மற்றும் மண் பரிசோதனை செய்ய வயல்களில் இருந்து மண் மாதிரிகள் தானிய பயிர்களுக்கு அரையடி ஆழம், ஆணிவேர் பயிர்களுக்கு முக்கால் அடி ஆழத்தில் இருந்து சேகரிக்கும் முறைகள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கண்காட்சியின் மூலம் மண் வளத்தை மேம்படுத்த உதவும் மண்புழு உரம் உயிர் உரம் நுண்ணூட்ட கலவை உள்ளிட்ட பல்வேறு வேளாண் இடு பொருட்களின் பயன்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

உளுந்து பயிரில் வாடல் மற்றும் அழுகல் நோய்கள் வராமல் தடுக்க விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சானக் கொல்லி உடனும் 4 கிராம் /1. கிலோ விதை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து எடையை அதிகரிக்க வடிவ ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 50 மில்லி / ஏக்கர் விதை விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக நெல் வயலில் ட்ரோன் மூலமாக நானோ யூரியா இலைவழி தெளிப்பு செயல்விளக்கம் செய்யப்பட்டது. நெற்பயிரில் திரவ வடிவ நானும் யூரியாவை ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் என்ற அளவில் ட்ரோன் மூலம் இலை வழி தெளிப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது . சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அந்தியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வேளாண்மை அறிவியல் நிலைய சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானி முனைவர் கிருஷ்ணவேணி யோகாசனம் செயல் விளக்கம் அளித்தார். இவ்விழாவில் 60 விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Spread the love