புது தில்லி, மே 5
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய்யை அடிப்படையாகக் கொண்ட பயோ டீசல் கலந்த டீசலின் விநியோகத்தை, நாட்டில் முதன் முறையாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், தில்லியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய்யை சேகரித்தல் மற்றும் மாற்றுவதற்கு உகந்த சூழலியலை உருவாக்கி, தொழில்முனைவு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரும் மேற்கொண்ட முன்முயற்சியின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பயோ எரிபொருட்களின் பயன்பாட்டில் இந்தியாவின் மைல்கல் சாதனையாக இந்த நிகழ்வு அமைந்திருப்பதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மீது நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்றும் கூறினார்.
இந்த முன்முயற்சியின் வாயிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயோ டீசலின் விநியோகம், வேலைவாய்ப்புகள், பொருளாதாரப் பயன்கள் அதிகரிக்கப்பட்டு, இறக்குமதியின் மீதான சார்பு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நாட்டிற்குத் தேவையான மருத்துவ பிராணவாயுவை வழங்குவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் அமைச்சர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் திரு தருண் கபூர், இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் திரு எஸ் எம் வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.