October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

புதுக்கோட்டை, அக்.12

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு விரைந்து பயிர்காப்பீடு செய்து கொள்ள வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.அன்பரசன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் சுமார் 3500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2021-22ம் ஆண்டிற்கு சம்பா நெல்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ.31,000 ஆகும். இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை 1.5 சதவிகிதம் மட்டுமே. இதன்படி ஏக்கருக்கு ரூ.465 காப்பீடு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானதாகும். நடப்பாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயிர்கடன் பெறும் மற்றும் பயிர்கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள். பயிர்கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அரசு அனுமதி பெற்ற பொது சேவை மையங்களிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் 1431 பசலிக்கான அடங்கல், கணிணி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அவற்றுடன் காப்பீடு செய்யவுள்ள பரப்பிற்கான பிரீமியம் தொகையியை செலுத்த வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்திட வரும் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும்.

ஆகவே விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்பயிரினை எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், பருவம் தவறிய மழை, கடும் வறட்சி போன்றவைகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து காத்திடவும் நிலையான வருமானம் கிடைப்பதை உறுதி செய்திடவும் கடைசி நாள் வரை காத்திராமல் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும். பயிர் காப்பீடு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Spread the love