October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சம்பா நெல் சாகுபடியில் குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்திடலாம்

வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, அக்.7

சம்பா நெல் சாகுபடியில் குருத்துப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது : தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா நெற்பயிரில் தண்டுத் துளைப்பான் எனப்படும் குருத்துப்பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதன் தாக்குதல் ஆரம்ப நிலையில் நெற்பயிரின் வளர்ச்சியினைப் பாதிப்பதனால் மகசூல் குறைந்திட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள் : குருத்துப்பூச்சித் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணிபால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. தண்டின் அடிப்பகுதியில் துளையும், புழுவின் எச்சமும் காணப்படும். இத்தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுதல் கூடாது. தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும். முதிர்ந்த நாற்றுகளை நடும் போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்து விடலாம். விளக்குப் பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பானிகம் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 15 நாளிலிருந்து வாரம் ஒரு முறை 4 வாரத்திற்குக் கட்டி அந்துப்பூச்சியின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

மேலும் அதிகளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4பு 7.5 கிலோ மண்ணிலிடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 ளுஊ40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 நுஊ 30 மி.லி. இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஒரு ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் குருத்துப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்றிடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love