August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாகுபடிப்‌ பரப்பான 60 சதவீதத்தினை 75 சதவீதமாக உயர்த்திட வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 21

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ நேற்று (20.07.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, தமிழ்நாட்டில்‌ அடுத்த பத்தாண்டுகளுக்குள்‌ கூடுதலாக 11.75 இலட்சம்‌ எக்டேர்‌ பயிரிடச்‌ செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப்‌ பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்தவும்‌, இருபோக சாகுபடி நிலங்களை 10 இலட்சம்‌ எக்டேரிலிருந்து 20 இலட்சம்‌ எக்டேராக உயர்த்தவும்‌, கிராம வாரியாக நிலங்களைக்‌ கணக்கெடுத்து, சாகுபடிக்குத் தேவையான அனைத்து பாசன வசதிகளையும்‌ உருவாக்கித்‌ தர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌ முதலமைச்சர்‌ அறிவுறுத்தினார்‌.

விவசாயிகளின்‌ தேவைக்கேற்ப விதைகள்‌, இரசாயன உரங்கள்‌ போன்ற வேளாண்மை இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம்‌ செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌ தொய்வின்றி விரைந்து மேற்கொள்ளவும்‌ அறிவுறுத்தப்பட்டது.

மேலும்‌, பருத்தி, சூரியகாந்திப்‌ பயிர்களில்‌, உரிய தொழில்நுட்பங்களைப்‌ பின்பற்றி, இப்பயிர்களின்‌ உற்பத்தித்திறனை உயர்த்தி, அகில இந்திய அளவில்‌ முதல்‌ மூன்று இடங்களுக்குள்‌ தமிழகம்‌ இடம் பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்‌.

விவசாயிகளின்‌ வயல்களில்‌ மழைநீரினைச்‌ சேமிக்க பண்ணைக்குட்டைகள்‌, தொகுப்பு அணுகுமுறையில்‌ நுண்ணீர்ப்‌ பாசனத்திட்டம்‌, விவசாயிகளை ஒருங்கிணைத்து, சிறுதானியங்களில்‌ சிறப்பு இயக்கம்‌, இயற்கை விவசாய முறையினைப்‌ பிரபலப்படுத்துதல்‌, தோட்டக்கலை பயிர்களுக்குத்‌ தனிக்கவனம்‌ செலுத்திட வேண்டும்‌ என்று முதலமைச்சர்‌ அறிவுறுத்தினார்‌. விவசாயிகளின்‌ விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கு மின்னணு ஏல முறை அறிமுகம்‌ செய்தல்‌, ஒரு மாவட்டம்‌ – ஒரு விளைபொருள்‌ என்ற அணுகுமுறையின்படி, உற்பத்தியை உயர்த்தி, அதற்கான மதிப்புக்கூட்டும்‌ தொழிற்சாலைகளை உருவாக்குதல்‌, படித்த இளைஞர்களை வேளாண்மையில்‌ ஈடுபடுத்தி, வேளாண்‌ தொழில்‌ முனைவோர்களாக உருவாக்குதல்‌, அனைத்து கிராம வேளாண்‌ மறுமலர்ச்சித்‌ திட்டம்‌ போன்ற தொலைநோக்குத்‌ திட்டங்கள்‌ குறித்து முதலமைச்சர்‌ ஆய்வு செய்தார்‌.

அபரிதமாகக்‌ கிடைக்கும்‌ சூரிய சக்தியைப்‌ பாசனத்திற்குப்‌ பயன்படுத்திட ஏதுவாக அதிகளவில்‌ சூரியசக்தி பம்புசெட்டுகள்‌ நிறுவ வேண்டும்‌ என்றும்‌, உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களைச்‌ செயல்விளக்கங்கள்‌ மூலம்‌ விவசாயிகளுக்குத்‌ தெரியப்படுத்த வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌. தமிழ்நாட்டில்‌ தோட்டக்கலை பயிர்களில்‌ உற்பத்தியை உயர்த்தவும்‌, தமிழக மக்களின்‌ வசதிக்காக மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இயங்கி வரும்‌ அரசு தாவரவியல்‌ பூங்காக்களை நன்கு பராமரிக்க வேண்டும்‌ என்றும்‌, விவசாயிகள்‌ உற்பத்தி செய்யும்‌ விளைபொருட்களுக்குச்‌ சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித்‌ தரவேண்டும்‌ என்றும்‌, விளைபொருட்களைச்‌ சேமித்து வைப்பதற்கு ஏதுவாக சேமிப்புக்‌ கிடங்குகள்‌ உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்‌ என்றும்‌ முதலமைச்சர் வலியுறுத்தினார்‌.

தமிழகத்தில்‌ ஏற்கெனவே துவங்கப்பட்ட அனைத்து உழவர்‌ சந்தைகளும்‌ நல்ல முறையில்‌ இயங்கவும்‌, இந்த நிதியாண்டில்‌ புதிய உழவர்‌ சந்தைகளை உருவாக்கவும்‌, செயல்படாமல்‌ இருக்கும்‌ உழவர்‌ சந்தைகளை மீண்டும்‌ செயல்பாட்டிற்குக்‌ கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌ முதலமைச்சர்‌ அறிவுறுத்தினார்‌.

தற்போது விவசாயப்‌ பணிகளுக்குப்‌ போதிய அளவு ஆட்கள்‌ கிடைக்காத காரணத்தாலும்‌, விவசாய உற்பத்தியைப்‌ பெருக்கும்‌ வகையிலும்‌, வேளாண்‌ பொறியியல் துறை மூலம்‌ விவசாயிகளுக்கு வேளாண்‌ இயந்திரங்களை வாடகைக்கு வழங்க ஏற்பாடு செய்தல்‌ மற்றும்‌ புதிய இயந்திரங்கள்‌ / வாகனங்களை மானியத்தில்‌ வழங்குதல்‌ குறித்து முதலமைச்சர்‌ ‌அறிவுறுத்தினார்‌.

Spread the love