September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாந்தோம் பள்ளி வளாகத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம்-அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.14

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் பள்ளி வளாகத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் (ம) ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள்) ஆகியோருக்கு 13.09.2021 முதல் 18.09.2021 வரை முதல் சுற்று, 20.09.2021 முதல் 25.09.2021 வரை இரண்டாம் சுற்று என இரண்டு சுற்றுகளாக (திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 மாத்திரை (200 மி.கி.) அல்பெண்டசோல் மாத்திரையும், 2 வயதிற்கு மேல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு 1 அல்பெண்டசோல் (400 மி.கி.) மாத்திரையும் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 1 முதல் 19 வயதுடைய 2.26 கோடி குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய 54இ67இ069 பெண்கள் (கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள்) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இந்தக் குடற்புழு நீக்க மாத்திரைகள் குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்கி, இரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என தெரிவித்தார்.

Spread the love