August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சான்று பெற்ற விதைகளின் அவசியம்

தரமான விதை சொத்து போன்றது என்பது நமது முன்னோர் வாக்கு. தரமான விதை இருந்தால் தான் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. குறைந்து வரும் சாகுபடி பரப்பில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இந்நிலையில் சான்று விதை உற்பத்தியில் விதை சான்றளிப்பு துறையின் பங்கு மிக மிக இன்றியமையாததாகும்.

விவசாயிகள் தங்களால் தயார் செய்த விதைகளையே தொடா்ந்து பயன்படுத்துவதால் விதைகளின் வீரியம் குறைந்து மகசூல் குறைந்த அளவில் கிடைக்கப்பெறுகிறது. தரமான விதை உற்பத்திக்கு நல்ல வளமுள்ள நிலத்தினை தேர்வு செய்து சான்று விதைகளை உபயோகிப்பதுடன் பயிர் விலகு தூரம் பேணி, ஒருங்கிணைந்த ஊட்டசத்து மற்றும் பூச்சி, நோய் நிர்வாகம் மேற்கொண்டு உரிய முறையில் கலவன்களை அகற்றி சரியான நேரத்தில் அறுவடை செய்து சுத்தமான உலர்களங்களில் விதைகளை சரியாக உலர வைத்து ஈரப்பதத்தினை பேணி சேமித்து வைக்க வேண்டும்.

சான்று விதை உற்பத்திக்கு விவசாயிகள் முதலில் வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கபெறும் ஆதார விதைகளை வாங்கி அதற்கான பட்டியல் மற்றும் சான்றட்டையினை கொண்டு விதை பண்ணை பதிவு செய்வதற்காக அருகில் உள்ள விதைச்சான்று உதவிஇயக்குநர் அலுவலகத்தினை அணுகி அதற்குரிய கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்யலாம். ஒவ்வொரு பயிரினை பொறுத்து பூக்கும் பருவத்திலும் காய்பிடிக்கும் பருவத்திலும் வயலாய்வு செய்திட விதைசான்று அலுவலர்கள் ஆய்வு செய்து கலவன்களை அகற்றிட அறிவுரை வழங்குவார்கள். கலவன்களை அகற்றிய பின்பு விதை பண்னையிலிருந்து விதைகளை கொள்முதல் செய்யலாம் என அறிக்கை வழங்கி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய பரிந்துரை செய்யப்படும். பின்னர் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைச்சான்று அலுவலர் முன்னிலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, விதைச்சான்று அலுவலர்களால் விதைமாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விதைப்பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி விதைப்பரிசோதனை செய்யப்படும். விதைபரிசோதனையில் தேறிய விதைகள் மட்டுமே சான்று விதைகளாக காலாவதி தேதியுடன் சான்றட்டை பொருத்தப்படும். சான்று பெற்ற விதைகள் சுத்த தன்மை, பிற ரக கலப்பு, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகிய முக்கிய இனங்களில் தேர்ச்சி பெற்று தரமான விதையாக விவசாயிகளுக்கு கிடைக்க பெறுகின்றது.

மேலும், விவசாயிகள் தங்களுடைய விதைகளை ரூ.80/- செலுத்தி தரமான விதையா என்பது குறித்த பரிசோதனையினை மேற்கொண்டு பயனடையலாம். எனவே, அனைத்து விவசாயிகளும் விதை சான்றளிப்பில் பங்கு பெற்று சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதுடன் அனைத்து விவசாயிகளும் சான்று பெற்ற விதைகளையே உபயோகித்து அதிக மகசூலினை பெற்று பயன்பெறுமாறு தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சேக் நூகு மற்றும் நீனா ஆகியோர்கள் கேட்டுக்கொண்டனர்.

Spread the love