திருநெல்வேலி, ஜூன் 15
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை மூலமாக விதைச்சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளில் வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன. வயல் தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு அந்த விதைகள் இயந்திரம் மூலம் சுத்தி செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதைகள் சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிற அட்டையும், சான்றுநிலை விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப்படுகிறது. மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சை நிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக்கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம். சான்று பெற்ற விதைகள் அதிக புறச்சுத்தம், அதிக இனச்சுத்தம், அதிக முளைப்புத் திறன், குறைவான ஈரப்பதம் மற்றும் பிற இரகக் கலவன் இல்லாமை போன்ற குணநலன்களைக் கொண்டிருக்கும். எனவே, சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தும் போது அதிக விளைச்சல் கிடைக்கும்.