June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற அழைப்பு

விருதுநகர், மே 13

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என விருதுநகர், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, விவசாயத்திற்கு அடிப்படை முதல் இடுபொருள் விதை. அவ்விதையானது விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் சான்று செய்யப்பட்ட விதையாக இருப்பின் சான்று விதையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் மரபுத்தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை கொண்டதாகவும், அதிக உற்பத்தி திறன் உடையதாகவும் இருக்கும்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கோடை பருவத்தில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்று பெற்ற விதை கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என இரண்டு அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். சான்றட்டையில் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். உற்பத்தியாளர் அட்டையில் விதை விபரம் மற்றும் பகுப்பாய்வு விபரங்கள் (புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம்) அச்சிடப்பட்டிருக்கும். அனைத்து பயிர்களுக்கும் தரமான சான்று விதையின் இனத்தூய்மை குறைந்த பட்சம் ஆதார நிலை விதைக்கு 99% இருத்தல் அவசியம். அதே போன்று சான்று விதைகளின் இனத்தூய்மை குறைந்தபட்சம் 98% இருத்தல் வேண்டும். சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் நல்ல முளைப்புத் திறன் சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை மற்றும் கலப்படமில்லாத அதிக மகசூல் பெறலாம். எனவே விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love