விவசாயிகளுக்கு விதைச்சான்று உதவி இயக்குநர் அறிவுரை
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விதையே விளைச்சலுக்கு ஆதாரம், விதை மட்டுமே 60 சதவீத மகசூலை நிர்யணம் செய்கிறது. எனவே சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகள் கண்டிப்பாக பயன்படுத்திட வேண்டும்.
சான்று பெற்ற விதையின் சிறப்பியல்புகள்
· சான்று பெற்ற விதைகள் அந்த இரகத்திற்கு உரிய பராம்பரிய குணங்களை கொண்டு இருக்கும்
· அதிகப்படியான முளைப்புத்திறன் கொண்டு இருக்கும்
· விதையாக பயன்படுத்துவதற்கு உரிய அனுமதிக்கப்பட்ட ஈரப்பதம் உடையதாக இருக்கும்.
· விதையின் தரத்திற்கு தேவையான இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை உடையதாக இருக்கும்.
· பிற இரக விதைகள் மற்றும் களைகள் இல்லாமல் இருக்கும்.
சான்று பெற்ற விதையினை பயன்படுத்துவதால்
விதைகள் நன்கு முளைத்து, வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும், வாளிப்பான நாற்றுகளை கொண்டு இயந்திர நடவு மற்றும் செம்மை நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யும் போது ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை கொண்டு நடவு செய்திட இலகுவாக இருக்கும். பயிரின் வளர்ச்சி ஒருமித்து இருக்கும். பயிர்கள் ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும். கூடுதல் மகசூல் கிடைக்கும்.