June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாலையில் விடவா கால்நடைகள்!

டாக்டர்.பா.இளங்கோவன், காஞ்சிபுரம், வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

இன்று பல பகுதிகளில் பராமரிக்கப்படும் கால்நடைகளை விவசாயிகள் அவிழ்த்துவிட்டு தன் உணவை தானே தேடி உண்டுவிட்டு வீட்டிற்கு இரவு மட்டும் வந்து சேர்ந்தால் போதும் என்று கருதி செலவில்லா மாடு வளர்க்கும் பேராசையில் கடும் இழப்பினை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அறியாமையே.

நன்கு பால் கறக்கும் தருணம் மட்டுமே பசுமாட்டை நன்கு கவனிப்பதும் பிறகு கறவை வற்றிய மாட்டுக்கு கடும் தீவனம் எதற்கு? நல்ல தீவனம் தேவையா? ஒன்றும் லாபம் இல்லையே! என்று உச்சக்கட்ட சுய நலத்தினால் பரிதாபமாக ஆண்டு முழுவதும் பேணாமல் கால்நடைச்செல்வம் விருத்தி ஆகாமல் கடும் இழப்பினை சந்திக்கிறார்கள்.

ஆம் முறையாக நாம் பசுவை ஆண்டு முழுவதும் பேண வேண்டும். அனைத்து சத்துக்கள் கொண்ட தீவனத்தை முறையாக அளிக்க வேண்டும். அதிலும் கறவை நின்றாலும் கூட மீண்டும் காசுபார்க்க அடுத்த பசுங்கன்று வர வேண்டுமே என்று எண்ணிப்பார்த்து நல்ல தீவன உற்பத்தி திட்டம் தீட்ட வேண்டும். மேலும், வேலிப்பகுதிகளில் தீவன மரங்கள் நடுவதும் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கண்டிப்பாக ஒரு கன்று ஒவ்வொரு ஆண்டும் பெற உன்னத வழிகள் அறிந்து நடப்பதும் நன்று. நீர் உள்ள விவசாயிகள் தீவனப் புல் வகைகள் பயறு வகை மற்றும் தீவன சோளம், மக்காச்சோளம், ஊறுகாப்புல் தயாரிப்பு தட்டு வெட்டும் கருவி பயன்பாடு, பிண்ணாக்கு வகைகள் உபயோகம் மூலம் கால்நடைகளைப் பேணி அவை தரும் கோமியம், பசுஞ்சானம் முதலியவற்றை மதிப்புக்கூட்டிட நடவடிக்கை எடுத்தல் அவசியம். அதாவது பஞ்சகவ்யா, ஜீவாம்ருதம் போன்ற தயாரிப்புகள் மேற்கொள்ளலாம். சாண எரிவாயு கலன் அமைத்து சாணத்தினால் கோபார் கேஸ் எனும் சாண எரிவாயு இலவசமாக பெற்று உபயோகிக்கலாம். பின்னர் உள்ள கழிவும், சிறந்த எருவாகும், ஒரே கல்லின் இரண்டு மாங்காய்கள் 1 டன் கணக்கில் சாணம் கிடைக்கிறது. அந்தக் கழிவில் நீண்ட நாள் பலன் தர உகந்த மண்புழு உரம், தயாரித்து உபயோகித்து களையே வராத சூழலை உருவாக்கலாம். மண்புழுக்கள் மூலம் வெர்மி வாஷ் எனும் மண்புழுக்குளியல் தயாரித்து பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கலாம்.

சாலையில் செல்லும் பயணிகள் கால்நடை மீது வாகனம் மோதி காயம் வருவதும் கால்நடைக்கழிவுகள் நடைபாதையில் இட்டு அது வழுக்கிவிட்டு வயதானோர்க்கு உயிர் ஆபத்து வருவதும் கண்கூடு, மேலும் கவனமின்றி திரியும் நம் கால்நடைகளே களவு போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சிந்தித்து சிரமம் பாராது கால்நடைக்கு உணவுக்கு செல்ல வழிகளைக் கையாளவும்.

மேலும், குப்பைத்தொட்டிகள் மற்றும் இதர கழிவுப்பகுதிகளில் உள்ள பொருட்களில் கால்நடைகள் உணவு தேடி உண்பது பரிதாபமாக பல தருணம் பாலித்தீன் பையில் உள்ள காய்கறிக்கழிவுகளுடன் பையையும் விழுங்குவதுண்டு. அதனால் இறக்கவும் வாய்ப்புள்ளதே. மேலும், இனவிருத்தி முயற்சிகளால் அடையாளம் தெரியாத இதர கால் நடைகளால் நோய் பெருகுவதுடன் பாதிப்பான இனப்பெருக்க உறுப்பு கொண்ட காளைகளால் தம் கருப்பையில் கடும் நோய்த்தொற்று பெற்று நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படலாம். இவையாவும் நம் விவசாய இனத்தையே அழிக்கும் செயல் என்பதால் எவரும் சாலையில் விட வேண்டாம். கால்நடைகளைப்பற்றி மேலும் விபரம் பெற 98420 01725 உள்ளது.

Spread the love