சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் 650 என்கே பைக்கிற்கு இந்தியாவில் வரவேற்பு இருந்த நிலையில் தற்போது பிஎஸ் 6 மாடலின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் பிரிமீயம் ரக பைக்குகள் மற்றும் ஆல் டெரயின் வாகனங்களை தயாரிப்பிற்கு பிரபலமான நிறுவனமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் இந்த நிறுவனம் பைக் விற்பனையை துவங்கியது. ஆனால், பிஎஸ்-6 கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விற்பனையை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பைக்குகளை அறிமுகப்படுத்தத் துவங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது 650என்கே பிஎஸ்-6 மாடலுக்கும் இந்தியாவில் முன்பதிவை துவங்கி இருக்கிறது. சிஎஃப் மோட்டோ இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் இந்தப் பைக்கை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பைக்கின் விலை விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்கள் ரூ.5,000 முன்தொகை செலுத்தி இந்தப் பைக்கை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு டெலிவரி பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிஎஃப் மோட்டோ 650என்கே பைக்கானது நேக்கட் ரக பைக் மாடலாக உள்ளது.
கேடிஎம் பைக்குகளின் டிசைன்களைப் போன்று தோற்றமளித்தாலும் தனித்துவமான வண்ணக் கலவைகளால் கவர்ச்சிகரமாக இந்தப் பைக் உள்ளது.
இந்த பைக்கின் முன்புறம் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. மேலும் முன்சக்கரத்தில் இரண்டு ரோட்டர்கள் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. அத்துடன் பாதுகாப்புக்காக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் தரப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் பேரலல் டுவின் சிலிண்டர் 649சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாடலில் கூடுதல் அம்சங்கள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் இல்லை.