கள்ளக்குறிச்சி, மே 13
தெலுங்கானாவிலிருந்து சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 2,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மத்திய அரசின், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக புதன்கிழமை, தெலுங்கானா மாநிலம், தரங்கா மாவட்டத்திலிருந்து 2600 டன் புழுங்கல் அரிசி, 52,000 மூட்டைகளில், புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திற்கு வந்தடைந்தது. அவை லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இங்கிருந்து கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலுள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பப்பட்டு, பின்பு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.