September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு

திருப்பூர், செப்.14

திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர் வட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிகபட்சம் 110 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும்.

நடப்பு ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெங்காயத்தின் தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை பேசி விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலச் செயலாளர் கூறியதாவது : விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாகுபடி செய்தால் மண்ணின் வளம் குறைந்து விடும். வேறு பயிர் சாகுபடி செய்து விட்டு அதன் பின்னர் சின்ன வெங்காயம் பயிரிடலாம். முன்னோர் காட்டிய வழியில் பயிர் சாகுபடியில் சுழற்சி முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். தற்போது 3 டன் முதல் 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. ஏற்றுமதி தரம் மிக்க சின்ன வெங்காய மகசூல் கிடைக்கவில்லை. இது போன்ற காரணத்தால் நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு செலவழித்த அசல் பணமாவது கிடைக்குமா? என்ற அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நல்ல விலையை எதிர்பார்த்து விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பெரும்பாலான விவசாயிகள் இருப்பு வைத்து பாதுகாத்து வருகின்றனர். 3 மாதங்கள் வரை சின்ன வெங்காயத்தை இது போன்ற முறையில் இருப்பு வைக்க முடியும்.

மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளை காப்பாற்ற நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதுபோல வேளாண்மைப் பயிரிடுதல் குறித்து அரசு கண்காணிப்பதுடன் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்றார்.

Spread the love