வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
அரியலூர், ஜூலை 23
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம், தேவமங்கலம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் த.சுப்ரமணியன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பேசுகையில், மானாவாரி சாகுபடியாக சிறு தானியங்களை பயிரிட்டு குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என கூறினார். மேலும் மாற்றுப்பயிர் சாகுபடி, நுண்ணூட்ட உரத்தின் பயன்பாடுகள், பசுந்தாள் உரப்பயிர் வயலில் இடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். வேளாண்மை அலுவலர் மா.மகேந்திரவர்மன், பேசுகையில் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விவசாயிகளிடத்தில் எடுத்துக் கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார், பேசுகையில் உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், பயறு சாகுபடியில் பயறு ஒண்டர் தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எடுத்துக்கூறினார். மேலும் மானாவாரி சாகுபடி செய்யும்போது விதைநேர்த்தி, இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை, விளக்குப்பொறி மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய்களை எவ்வாறு கட்டுபடுத்துவது குறித்தும் விவசாயிகளிடத்தில் எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியின் முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் அட்மா திட்டம் குறித்து எடுத்துக்கூறினார். இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வம், அட்மா திட்ட விவசாய நண்பர் சிவக்குமார் மற்றும் விவசாய பெருமக்கள் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.
இத்தகவலை, ஜெயங்கொண்டம், வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.