October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சீராகும் கொப்பரை விலை

இருப்பு வைத்த தேங்காயை விற்பனை செய்ய திட்டம்

திருப்பூர், அக்.7

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பரப்பு பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும், தேங்காய்க்கு, கொப்பரை விலையை ஆதாரமாகக்கொண்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல், ஊரடங்கு உட்பட காரணங்களால், தேங்காய் மற்றும் கொப்பரை விலையில், மந்த நிலை உருவானது. தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ தாக்குதல் உட்பட காரணங்களால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தேங்காய் விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்தனர். பெரும்பாலான விவசாயிகள், அதிக உற்பத்தி இருக்கும் சீசனில், தேங்காயை விற்பனை செய்யாமல், தோட்டங்களிலேயே இருப்பு வைத்தனர். இவ்வாறு, பல லட்சம் தேங்காய்கள், உடுமலை பகுதியில் விற்பனையாகாமல் இருப்பு செய்யப்பட்டது. கொப்பரை உற்பத்திக்கான உலர் களங்களிலும், உற்பத்தி குறைக்கப்பட்டு, வர்த்தகம் பாதித்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருவதால், கொப்பரை வர்த்தகம் மீண்டும் சூடுபிடித்துள்ளது, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, காங்கேயம் சந்தை அடிப்படையில், கொப்பரையின் விலையும் கிலோ நூறு ரூபாய் என, ஏறுமுகத்தில் உள்ளது. இதனால், இருப்பு வைத்த தேங்காயை விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : கடந்த சில மாதங்களாக, வர்த்தகத்தில் நிலவிய தொய்வு காரணமாக, தேங்காயை விற்பனை செய்யவில்லை. வழக்கமாக, அக்., மாதத்தில், தென்னை மரங்களில், தேங்காய் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இதனால், உலர்களங்களுக்கு தேவை அதிகரித்து, தேங்காய் விலை பல மடங்கு உயரும். ஆனால், நடப்பாண்டு, அதிக காய்கள் இருப்பு வைக்கப்பட்டதால், கொப்பரை, தேங்காய் விலையில், உடனடியாக மாற்றம் ஏற்படாமல், படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், தேங்காய் பாதிப்பதை தவிர்க்கவும், விற்பனைக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளோம் என தெரிவித்தனர்.

Spread the love